search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிங்காரவேலர் கோவில்"

    சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
    நாகை மாவட்டம் சிக்கலில் பிரசித்தி பெற்ற வேல்நெடுங்கன்னியம்மன், நவநீதேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள சிங்காரவேலர் அன்னை வேல்நெடுங்கன்னி அம்மனிடம் இருந்து வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அம்மனிடம் இருந்து வேல் வாங்கியவுடன் சிங்காரவேலர் மேனி எங்கும் வியர்வை சிந்தும் காட்சி வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும்.

    இந்த காட்சியை காண தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிக்கலில் குவிகின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற சிங்காரவேலர் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கந்தசஷ்டி விழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    விழாவையொட்டி முன்னதாக கணபதி ஹோமம், சுந்தர கணபதிக்கு அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி ஆகிய நிகழச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து சிங்காரவேலர் தங்க மஞ்சத்தில் வீதி உலாவும், பவள ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது. கடந்த 10-ந்தேதி தங்கமயில் வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 7 மணிக்கு நடைபெற்றது. அப்போது சிங்காரவேலர் சிறப்பு அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். கோவிலில் இருந்து தொடங்கிய தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் அன்னையிடம் சக்திவேல் வாங்குதலும், சக்திவேல் வாங்கியவுடன் சிங்காரவேலருக்கு வியர்வை சிந்தும் காட்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
    ×